Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க.வினர் இடம் பெறும், ஊடக விவாதங்களில் இனி நான் கலந்து கொள்ளப்போவதில்லை: ஜோதிமணி காட்டம்

மே 19, 2020 09:49

திருச்சி: “பெண் என்றால் ஒரு ஆபாச அணுகுமுறை. ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பா.ஜ.க. நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பா.ஜ.க.வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப்போவதில்லை,” என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பா.ஜ.க.வின் கரு. நாகராஜன் பேச்சால் வெளியேறினேன். புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை, வறுமையை, கண்ணீரை, வேதனையை, வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.

பிரதமர் மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். என்னை நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பா.ஜ.க.வினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் வெளியேறினேன். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஊடக விவாதங்களில் பா.ஜ.க.வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பா.ஜ.க.வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.

பா.ஜ.க. என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும், பா.ஜ.க.வையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பா.ஜ.க.தான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பா.ஜ.க.வின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன்.

தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பா.ஜ.க.வை மேலும் தோலுரித்தன. பா.ஜ.க. பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பா.ஜ.க. நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம். பிரதமர் முதல் பா.ஜ.க.வின் கரு. நாகராஜன் போன்ற பேச்சாளர்கள் எதிர்க்கட்சியினரை, ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம்.

ஆனால், நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள். எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,50,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அளித்தார்கள். இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை, நேர்மை, அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும். 

இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பா.ஜ.க. தான் முடங்கிப் போகும். விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பா.ஜ.க.வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்