Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நகை, துணிக்கடைகளை மூட உத்தரவு

மே 21, 2020 06:20

கரூர்: கரூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நகை மற்றும் துணிக்கடைகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அடைக்கப்பட்டன. ஜவகர்பஜார் கோவைரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் கடைகள் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி முதல் சில தொழில்களுக்கு தளர்வு அளித்து இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இதில் மின்சாதன வசதியில்லாத சிறிய நகைக்கடைகள் சிறிய அளவிலான துணிக்கடைகள், செல்போன் கடைகள், மின்சாதன விற்பனை கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகளை திறக்கலாம் எனவும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் அவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 17-ந்தேதி மேலும் சில தொழில்களுக்கு தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கரூர் நகர பகுதிகளுக்கு உட்பட்ட ஜவகர்பஜார், கோவைரோடு, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான துணிக் கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் சென்றனர்.

இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் ஜவகர்பஜார், கோவைரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு உத்தரவை கடைபிடிக்காத கடைகளை மூட உத்தரவிட்டனர். இதையடுத்து பெரும்பாலான நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அடைக்கப்பட்டன. இதனால் துணி நகைக்கடைகளுக்கு வேலைக்கு வந்த ஊழியர்கள் மற்றும் நகை எடுக்க துணி எடுக்க வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

இதனால் மதியத்திற்கு மேல் ஜவகர்பஜார், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்; அரசு உத்தரவை கடைபிடிக்காத பல கடைகள் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளதை கண்டு அவற்றை அடைக்க உத்தரவிட்டோம். அரசு உத்தரவுக்கு மாறாக கடைகளோ நிறுவனங்களோ திறந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என்றனர்.

தலைப்புச்செய்திகள்