Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுலுக்கு ஒன்றும் தெரியாது: ரவிசங்கர்

மார்ச் 14, 2019 10:20

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு வெளியுறவு கொள்கை பற்றி ஒன்றும் தெரியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4 வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்காக மோடி அரசை கடுமையாக விமர்சித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார். 

டில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாவது: ராகுல், உங்களால் டுவிட்டரில் வெளியுறவு கொள்கையை முடிவு செய்ய முடியாது. வெளியுறவு கொள்கை பற்றி ராகுலுக்கு ஒன்றும் தெரியாது. வெளியுறவு கொள்கை என்பது மிக முக்கியமான விவகாரம். அதனை டுவிட்டரில் கருத்து போட்டு விளக்க முடியாது. தூதரக விவகாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என ராகுலுக்கு தெரியாது. ராகுல் நிறைய படிப்பதில்லை. காங்கிரசில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்கள் அவருக்கு விளக்குவார்கள் என நம்புகிறேன். 

2009 ம் ஆண்டு காங் ஆட்சியின் போது கூட சீனா இதே போன்று தான் செய்தது. அப்போது ஏன் கேள்வி கேட்கவில்லை? ராகுலின் இன்றைய டுவிட்டர் பதிவு கூட பாக்., நாளிதழ் ஒன்றில் வெளியான தலைப்பு தான். டோக்லாமில் நீங்கள் சீன அதிகாரிகளை சந்தித்துள்ளீர்கள். சீன அதிகாரிகளும் நீங்கள் மானசரோவர் சென்ற போது உங்களுடன் பேசி உள்ளார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சீனாவிடம் கேட்டிருக்கலாமே? நீங்கள் அப்படி செய்ய வேண்டும் என்று தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். கொடூரமான கொலைகாரனான மசூத் அசார் விவகாரத்தில் காங்கிரசின் வித்தியாசமான நிலைப்பாடு ஆச்சரியம் அளிக்கிறது என்றார். 
 

தலைப்புச்செய்திகள்