Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆனைக்கட்டி பள்ளியில் பயிலும் கேரளா வாழ் தமிழ் மாணவர்கள்: பத்தாம் வகுப்பு தேர்வெழுத வருவதில் சிக்கல் நீடிப்பு

மே 21, 2020 07:21

கோவை: கேரள அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பள்ளியில் பயிலும் கேரளா வாழ் தமிழ் மாணவர்கள் 21 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுத வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இ-பாஸ் பெற்றாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர அனுமதி மறுக்கப்படுவதால் மாற்றுப்பாதையில் 180 கிலோ மீட்டர் சுற்றி தேர்வெழுத வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஜூன் ஒன்றாம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மூடப்பட்டுள்ள வெளி மாநில எல்லைகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை இருப்பதால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள ஆனைக்கட்டி உயர் நிலைப்பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத வருவதில் சிக்கல் நிலவுகிறது. ஆனைக்கட்டி பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில்,  தமிழகத்தை ஒட்டி கேரளாவிற்குள் அமைந்துள்ள அட்டப்பாடி, சோலையூர், அகழி, கூலிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பழங்குடிகள் மற்றும் மற்ற தமிழ் மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

சுமார் 60 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 8 கிலோ மீட்டர் சென்று சின்னத்தடாகம் பள்ளியில் தேர்வு எழுதி வந்தனர். கொரோனா காரணமாக முதல் முறையாக இப்பள்ளி மாணவர்கள் தேர்வெழுத இப்பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அட்டப்பாடி பகுதியில் உள்ள 21 மாணவ, மாணவிகள் தேர்வெழுத தமிழகம் வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதேபோல சின்னத்தடாகம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் 11 ம் வகுப்பு தேர்வெழுத வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனைக்கட்டியில் உள்ள சோதனைச்சாவடியில் கேரள அதிகாரிகள் அதிக கெடுபிடிகள் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இ-பாஸ் பெற்று வந்தாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர கேரள அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். தேர்வு அட்டவணை மாறி, மாறி அறிவிக்கப்படுவதால் குழப்பத்திலும், எப்படி தேர்வெழுத வருவது என்பது என்றும் தெரியாமல் பரிதவிப்பதாக கேரளாவில் உள்ள தமிழ் மாணவர்கள்  தெரிவித்தனர். மேலும் மாநில எல்லைகளை கடந்து தேர்வெழுத செல்வதால் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இப்பிரச்னையில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மற்றும்  கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாகும்.

தலைப்புச்செய்திகள்