Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவை-காரைக்காலுக்கு பேருந்து சேவை தொடக்கம்

மே 21, 2020 08:15

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் இரு மாவட்டங்களை கடந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பேருந்துகள் சேவை தொடங்கியது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்தது. அதில், புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் மாவட்டத்திற்கும் பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என கடலூர் மற்றும் நாகை மாவட்டங்கள் வழியாக காரைக்காலுக்கு பேருந்துகள் செல்ல வேண்டுமென்பதால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டது.

இதனையடுத்து தமிழக பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் இரு மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து, நேற்று காலை முதல் காரைக்காலுக்கு புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.
முன்னதாக பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணிந்தும், கைகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டார்கள். மேலும் சமூக இடைவெளியுடன் 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பேருந்து புறப்படுவதற்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாறன், பயணிகளிடம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், தமிழக பகுதிகளில் இறங்கக்கூடாது என அறிவுறுத்தினார். பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்