Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்கத்தை வாரி சுருட்டிய ஆம்பன் புயல்: வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்

மே 21, 2020 08:32

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கும், வங்க தேசத்திற்கும் இடையே கரையை கடந்த ‘ஆம்பன்’ புயலால் பெய்த பேய்மழையில் கொல்கத்தா விமான நிலையம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது.

வங்கக் கடலில் உருவான ‘ஆம்பன்’ புயல் சூப்பர் புயலாக மாறியது. இது நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. மேற்கு வங்கத்தில் 6 மணி நேரத்திற்கு விடாமல் காற்று வீசியது. நீண்ட நேரம் பெய்த பேய் மழையால் சாலைகள் முழுவதும் நீரில் தத்தளித்தன. மரங்கள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தன.

கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கொரோனாவால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கார்கோ விமானமும், மீட்பு விமானமும் மட்டுமே இயக்கப்பட்டன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கொல்கத்தாவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

புயல் பாதிப்பின் போது முதல்வர் அலுவலகத்தில் இருந்த மம்தா பானர்ஜி, இது பேரழிவு,  கொரோனாவை விட மிகவும் மோசமான அழிவு என்றார். தாழ்வான இடங்களில் வசித்த 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. விமான நிலையம் முழுவதும் வெள்ள நீர் புகுந்தது. அங்குள்ள ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புயலால் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், மிட்னாபூர், ஹூக்ளி, கொல்கத்தா ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. வங்கக் கடலில் மிகவும் பயங்கரமான புயலான ஆம்பன் புயல். 10 ஆயிரம் பேரை பலி வாங்கிய 1999ம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு பிறகு முதல் சூப்பர் புயல் ‘ஆம்பன்’தான் என்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் ஹவுரா பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட கார்கள் சேதமடைந்தன. கார்களின் கதவுகளின் கைப்பிடிகளுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் கார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்