Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமரை இழிவுப்படுத்தி பேசிய ஜோதிமணி மீது காவல் நிலையத்தில் பா.ஜ., புகார்

மே 22, 2020 06:15

மண்ணச்சநல்லூர்: தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பாரதப் பிரதமர் மோடியை கரூர் எம்.பி. ஜோதிமணி இழிவுப்படுத்தி பேசியதாகவும் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டது.

கடந்த 18ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில், ‘புலம் பெயர்ந்த தொழிலாளர் விவகாரத்தில் அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கிறதா?’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்டு கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசும்போது, “எதிர்கட்சிகள் களத்தில் நின்று சேவை செய்வதால்தான் பாரத பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா கட்சியையும் மக்கள் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது.

இதன் மூலம், பாரதப்பிரதமரை இழிவுப்படுத்தியும், அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் விதமாகவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசியுள்ளார் எனவும், அந்த நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் அந்த தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் அக்கட்சியினர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. மோகன்ராஜூவிடம் புகார் மனு கொடுத்தனர். 

மண்ணச்சநல்லூர் ஒன்றிய பா.ஜ. தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜகாந்தன், முன்னாள் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட செயலாளர் சூர்யகாந்த், தத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ரவிச்சந்திரன் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் சண்முகம், சந்தானம், ராஜகோபால், மணிகண்டன், செந்தாமரைக்கண்ணன், ரெங்கபாஷ்யம், அன்புராஜ், பாலச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்