Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா ஒழிப்பு பணியில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா: வெளியூர்களில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்க உதவி

மே 22, 2020 09:37

மும்பை: கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் தற்போது உலகை ஆட்டி படைத்து வருகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. கொரோனா வைரஸின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

எனவே, கொரோனா வைரஸ் பிரச்னையை சமாளிக்க அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா முன்னணி இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை ஆரம்பித்ததில் இருந்தே மஹிந்திரா நிறுவனம் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறது.

கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் வென்டிலேட்டர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோயாளியின் சுவாச மண்டலத்தை அது தாக்குவதால், வென்டிலேட்டர்கள் தற்போது அதிகளவில் தேவைப்படுகின்றன. இதனால் மிகவும் குறைவான விலையில் வென்டிலேட்டர்களை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதுதவிர மிகவும் அத்தியாவசியமான முக கவசங்களையும் மஹிந்திரா தயாரித்து வழங்கியுள்ளது. ஆனால், மாஸ்க்குகளை விட ஃபேஸ் ஷீல்டுகள் அதிக பாதுகாப்பை வழங்க கூடியவை என்பதால், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் ஷீல்டுகளையும் மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு உதவிகளையும் மஹிந்திரா அறிவித்துள்ளது.

இதன்படி, இந்தியா முழுவதும் இருக்கும் மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட்களை, தற்காலிக சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றி கொள்வதற்கான அனுமதியை மஹிந்திரா வழங்கியது. அத்துடன் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது 100 சதவீத சம்பளத்தையும், கொரோனா வைரஸ் தடுப்பு நிதிக்கு வழங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் மற்றவர்களும் நிதியுதவி செய்ய முன் வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இப்படி பல்வேறு உதவிகளை மஹிந்திரா செய்து வரும் நிலையில், தற்போது மற்றொரு அவசியமான உதவியையும் மஹிந்திரா செய்துள்ளது.

வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த கூலி தொழிலாளர்கள்தான் கொரோனா வைரஸ் பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் நிலைக்கு இதனால் அவர்கள் தள்ளப்பட்டனர். எனவே, தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

ஆனால், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாததால் பலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவை நடந்தே கடந்து வருகின்றனர். இன்னும் சிலர் சைக்கிள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த பயணத்தில் பல விபரீதங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதில், சாலை விபத்து முக்கியமானது. உயிரை காப்பாற்றி கொள்ள சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் பலர் சாலை விபத்தில் சிக்கி தங்களை உயிரை இழந்துள்ளனர். பசி, பட்டினி ஆகிய கொடுமைகளையும் தொழிலாளர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவி செய்யவும் மஹிந்திரா நிறுவனம் முன்வந்துள்ளது.

இடம்பெயரும் தொழிலாளர்கள் வீடு சென்று சேர்வதற்காக, 139 வருவாய் கோட்டாச்சியர்களுடன் மஹிந்திரா நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் ஒடிசா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 139 வருவாய் கோட்டாச்சியர்களுடன் இணைந்து மஹிந்திரா பணியாற்றி வருகிறது. வெளியூர்களில் சிக்கி தவித்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக திரும்புவதே இதன் நோக்கம்.

மஹிந்திரா நிறுவனமும், அதன் டீலர் பார்ட்னர்களும், அரசு அதிகாரிகளுடன் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களின், போக்குவரத்து பிரச்னைகளை சமாளிக்க உதவி செய்து வருகின்றனர். இந்த உதவியை செய்து வருவதற்காக, டீலர் பார்ட்னர்களுக்கு நன்றி, பாராட்டுக்களை ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்