Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவின் ஜி.டி.பி. தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

மே 22, 2020 10:47

புதுடெல்லி: “இந்தியாவின் ஜி.டி.பி. தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளது,” என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. லாக்-டவுன் காரணமாக 90 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரம் பெரிய அளவில் சரிய தொடங்கி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொருளாதார சரிவை மீட்க ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தாவது:
மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம். தொடர்ந்து உணவு விலை அதிகரிக்கும்.

நடப்பு 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17 சதவீதம் குறைந்துள்ளது. நகர்ப்புற, கிராமப்புற தேவைகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. ஜி.டி.பி. சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை.

கடந்த 3 நாட்களாக உலக நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறோம். 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலக பொருளாதாரம் சரிவுகளை கண்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தியாவின் ஜி.டி.பி. தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளது. உலகளவில் இந்த பொருளாதாரம் சரிந்துள்ளது. வளரும் நாடுகளில் வளர்ச்சி விகிதம் 2.9 சதவீதத்தில் இருந்து மைனஸ் 6.8 சதவீதமாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப்பொருள் பணவீக்க விகிதம் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வருங்கால நிதிக் கொள்கை கூட்டத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு செய்தோம்.

இவ்வாறு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்