Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் செப்., முதல் அமல்: அமைச்சர் அறிவிப்பு

மே 23, 2020 06:17

சென்னை: தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், செப்டம்பர் முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ரேஷனில், அதிக உணவு தானியங்கள் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவற்றின் வினியோகம் தொடர்பாக, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்களிடமும், டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அவரிடம், தமிழக அமைச்சர் காமராஜ் கூறியதாவது: தமிழக ரேஷன் கடைகளில், ஏப்ரலில், 2.08 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றை இலவசமாக வழங்கியது போல, இம்மாதமும், ஜூன் மாதமும் வழங்கப்படும்.ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஏப்ரலில், 96 சதவீதம்; இம்மாதம், 21ம் தேதி வரை, 85 சதவீதம் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை செய்வதற்காக, தமிழகத்திற்கு, 2,609 கோடி ரூபாய் மானியத்தை வழங்காமல், மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. அந்த தொகையை, உடனே விடுவிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள, 4.66 லட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 56 கோடி ரூபாய் செலவில், தலா, 15 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், இரு மாதங்களாக வழங்கப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க, பயோமெட்ரிக்' கருவிகள் வாங்கப்பட உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்கும் தொழில் நுட்ப பணிகள் முடிந்ததும், தமிழகத்தில், செப்., முதல், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்