Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டியலின மக்களை இழிவாக பேசிய, ஆர்.எஸ்.பாரதியை கண்டித்தாரா ஸ்டாலின்: முதல்வர் கேள்வி

மே 23, 2020 07:59

சேலம்: பட்டியலின மக்களை இழிவாக பேசியதால் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நியாயப்படி பார்த்தால் தனது கட்சிக்காரரை அழைத்து ஸ்டாலின் கண்டித்திருக்கவேண்டும் அதைவிடுத்து என்மீது புகார் கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார் என முதல்வர் விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேசியதாவது:

ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆர்.எஸ்.பாரதியை காவல் துறை கைது செய்துள்ளது குறித்து கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார் . வேடிக்கையாக இருக்கு. பட்டியல் இனத்தவரை விமர்சனம் செய்தததற்கு மதுரையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்ற ஆதித்தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர் கடந்த மார்ச் 12 அன்று புகார் அளித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். அரசியல் ஆதாயம் தேட பொய்யான பிரச்சாரத்தை ஸ்டாலின் செய்கிறார் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி பேசுவதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலின் முறைப்படி என்ன செய்திருக்க வேண்டும், தனது கட்சியைச் சேர்ந்தவர் இப்படிப்பட்ட இழிவான பேச்சை பேசியவுடன் அழைத்து கண்டித்திருக்கவேண்டும்.

அதைவிடுத்து அதை என் மீது பழி போடுவது என்ன நியாயம். இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மிகப்பெரிய விஞ்ஞானியைப் போலும் அவர் அறிக்கையால் அவரை கைது செய்ததுபோலும் கூறியுள்ளார்.

அப்படி என்ன ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்? ஏதோ காகிதத்தில் எழுதி கொண்டுப்போய் கொடுக்கிறார். ஊடகங்களும் அதை பதிவு செய்கிறீர்கள். எதையும் ஆய்வு செய்து அது உண்மையான தகவல்தானா என விசாரித்து ஊடகங்கள் பதிவு செய்யவேண்டும்.

உயர் பதவியில் உள்ளவர் மீது பழி சுமத்தினால் தானே இவர்கள் கட்சி இருப்பதை காட்டிக்கொள்ள முடியும். இன்னும் டெண்டரே வரவில்லை, அதற்குள் புகார் அளிக்கிறார்கள். அதிலும் இவர் இவருக்குத்தான் டெண்டர் கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.

இது இ டெண்டர் அதில் டெண்டரை பிரித்தால்தான் டெண்டர் போட்டதே யார் என்று தெரியும். திமுக ஆட்சியில் வேறொரு டெண்டர் முறை இருந்தது. வேண்டியவர்களுக்கு டெண்டரை ஒதுக்கலாம். அப்படி ஒரு நிலை இருந்தது அதே எண்ணத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அந்த நிலை மாறிவிட்டது. இ.டெண்டர் முறை வந்துவிட்டது. நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் இதற்கு மேல் இதுகுறித்து பேசவேண்டாம் என்று நினைக்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்