Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆர்.எஸ்.பாரதி கைது பழிவாங்கும் நடவடிக்கை: திருமாவளவன் கண்டனம்

மே 23, 2020 09:07

சென்னை:ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

"திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதியைத் திடீரென தமிழக அரசு கைது செய்திருக்கிறது. பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலித் மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப்போலவும், தலித் மக்களை யார் சீண்டினாலும் இழிவுபடுத்தினாலும் வேடிக்கைப் பார்க்க மாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போமென சாதி, மத வெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாக தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும், அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அதிமுக அரசு. எனவே, தலித் மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா?

கொரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிராக சாதிக்கொடுமைகள் நடந்துவிடக்கூடாதென கண்ணும் கருத்துமாய் செயல்படுவதால்தான், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழக அரசின் கடமையுணர்வை நினைவுகூர்வது நம் கடமையல்லவா?

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.

கொரோனா மற்றும் ஊரடங்கு நெருக்கடி உள்ள இந்தச்சூழலிலும் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறி இருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய சீராய்வு கூட்டம் கூட கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இவையெல்லாம் இந்த அரசு எந்த அளவுக்குத் தலித்மக்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அக்கறையோடு இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.

இந்நிலையில், அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித் மக்களின் மீதான அக்கறையா? அல்லது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு தலித் மக்களுக்கான தேசிய ஆணையம் ஏதேனும் முனைப்பு காட்டியதுண்டா? குறிப்பாக, ஆணவக்கொலைகளைத் தடுக்க அந்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதற்கென ஒரு சட்டம் வேண்டுமென கோருகிறோமே, அதனை பாஜக அரசு என்றைக்காவது பொருட்படுத்தியதுண்டா?

ஆனால், திமுக கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித் மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா? தேசிய ஆணையத்தையும் இதற்காக பாஜக அரசு பயன்படுத்துவது நியாயமா?

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுகவையும், அதிமுகவையும் பலவீனப்படுத்தாமல் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். இந்நிலையில், அதிமுகவை முழுமையாகத் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கும் பாஜக, திமுகவைப் பலவீனப்படுத்துவதையே முதன்மையான செயல்திட்டமாக வரையறுத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாஜகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி அவர்கள் தமது அரசியல் விளையாட்டுகளை நேரடியாக நடத்துவதே முறையாக இருக்கும். அதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கருவியாக்குவதும், தலித் மக்களைப் பலிகடா ஆக்குவதும் ஏற்புடையதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.பாரதி அதிமுக அரசுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்தி வருவதால் அவரைப் பழிவாங்க வேண்டுமென்கிற உணர்வு மேலோங்கியிருப்பதாலும், தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜகவின் சாதி அரசியல் விளையாட்டுக்கு இணங்கிப்போக வேண்டிய இயலாமைக்கு ஆளாகியிருப்பதாலும் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் இப்போக்கு மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

பாஜக-அதிமுக நடத்தும் சாதி அரசியலையும், சாதி- மதவெறி சக்திகளின் கூட்டுச்சதியையும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்"

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்