Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க.வின் மாபெரும் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு சந்திக்க நேரிடும்: ஸ்டாலின் எச்சரிக்கை

மே 24, 2020 09:14

சென்னை: “தி.மு.க.வின் மாபெரும் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு சந்திக்க நேரிடும். பொய் வழக்குகளில் இருந்து தி.மு.க.வினரை காக்க மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது” எனவும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களின் விவரம் வருமாறு:
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.யை கைது செய்தபோது, அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற்றிட நீதிமன்றத்தில் வாதாடிய தி.மு.க. சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திலும், குறைபாடுகளினாலும், குளறுபடிகளினாலும் முழுத் தோல்வியடைந்துவிட்ட விரக்தியிலும் குரோதத்திலும்  தி.மு.க.வினர் மீதும், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும், சட்ட நெறிமுறைகளை தமது விருப்பத்திற்கேற்ப வளைத்து, பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருக்கும் அரசுக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அமைச்சர்கள், காவல்துறையை தமது மனம்போன போக்கில் பயன்படுத்தி, தி.மு.க.வினர் மீதும், தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீதும், அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தி, பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது என்ற இந்த அனைத்தும் ஜனநாயக விரோத, தன்னிச்சையான, அராஜகச் செயல்கள் என்பதை விட, கருத்துச் சுதந்திரத்தையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறையிலான செயல்பாட்டையும், கெட்ட எண்ணத்துடன் தடுக்கும், அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

"கொரோனா தோல்விகளையும்", "கொரோனா ஊழல்களையும்" திசை திருப்பி, கட்சியின் "ஒன்றிணைவோம் வா" என்ற எழுச்சி ஊட்டும் மக்கள் நிகழ்ச்சியைத் தடுத்திடும் வகையிலும், களங்கப்படுத்திடும் முறையிலும் செயல்படும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனிமேலும் தி.மு.க. பொறுத்துக் கொள்ள முடியாது என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் எச்சரிக்கை விடுக்கிறது.

இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கோ, அச்சுறுத்தலுக்கோ இந்த இயக்கம் என்றைக்கும் அஞ்சாது. இந்த இயக்கத்திற்காக ஓயாது உழைத்திடும், உயிரினும் மேலான ஒவ்வொரு தொண்டரையும் காப்பாற்றிடும் பொருட்டு, தி.மு.க. நேரடியாகக் களம் காணும் மாபெரும் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு சந்திக்க நேரிடும் என்று மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கிறது.

அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் தி.மு.க. தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும், அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது என்றும் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்