Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு: பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

மே 24, 2020 09:42

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1 ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பிற்கு பிறகு மத்திய மின்சார ஒழுங்குமுறை இணை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவா மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மாநிலங்களின் மின்துறையின் நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டண நிர்ணயம் குறித்து ஆண்டுதோறும் மத்திய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஆணையம் இந்த அறிக்கையின் அடிப்படையில் மின்கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க அனுமதி அளிக்கும்.

இந்நிலையில் நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என சமீபத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் கட்டணத்த உயர்த்துவது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மின்சார ஒழுங்கு முறை இணை ஆணையம் மக்களிடம் கருத்து கேட்டது. இதனையடுத்து தற்போது புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அதன்படி, வீட்டு உபயோகத்திற்கு 5 பைசாவில் இருந்து 30 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வர்த்தக பயன்பாட்டிற்கு குறைந்த பட்சம் 10 பைசாவில் இருந்து அதிகபட்சம் 20 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு 100 யூனிட்டுகளுக்கு ரூ.1.50 பைசா என்பதில் மாற்றம் செய்யாமல் 101 முதல் 200 யூனிட் வரை ரூ.2.50 லிருந்து ரூ.2.55 பைசாவாகவும், 201 யூனிட்டிலிருந்து 300 வரை ரூ.4.35 லிருந்து 4.50 ரூபாயாகவும், 301 யூனிட்டுகளுக்கு மேல் ரூ.5.60 லிருந்து 5.90 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் வர்த்தக பயன்பாட்டிற்கு 100 யூனிட்டுகள் வரை ரூ.5.50 லிருந்து ரூ. 5.60 ஆகவும் ரூ.101 முதல் 250 யூனிட் வரை ரூ.6.60 லிருந்து ரூ.6.65 பைசாவாகவும், 251 யூனிட்டுகளுக்கு மேல் ரூ.7.20லிருந்து 7.40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

இதனிடையே கொரோனா அச்சுறுத்தலால், அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும், அரசு உடனே மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்