Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 மாவட்டங்களில் கடும் வெயில்;14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

மே 25, 2020 07:22

சென்னை : 'தமிழகத்தில், 14 மாவட்டங்களில் மழையும், ஆறு மாவட்டங்களில் வெயிலும் நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு:கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், வேலுார் ஆகிய, 14 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை ஆகிய, ஆறு மாவட்டங்களிலும், திருத்தணியிலும், அதிகபட்சமாக, 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு, அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில், ஒரு வாரமாக வீசிய வெப்பக்காற்று, நேற்று முதல் குறைந்துள்ளது. பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியசுக்கு கீழே சரிந்துள்ளது.சில இடங்களில் வழக்கமான கோடை வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அதிகபட்சமாக, திருச்சியில், 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. வேலுார், 42; சேலம், மதுரை, 41; பாளையங்கோட்டை, 39; கோவை, 37; புதுச்சேரி, நாகை, 36 டிகிரி செல்ஷியஸாக வெயில் பதிவானது.

சென்னையை பொறுத்தவரை, 'அம்பான்' புயலின் மறைமுக பாதிப்பாக, ஒரு வாரம்கடும் வெயில் நிலவியது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில், 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இந்த வெயில் படிப்படியாக குறைந்து, நேற்று முன்தினம், 40 டிகிரி செல்ஷியசாகவும், நேற்று, 36 டிகிரி செல்ஷியசாகவும் குறைந்தது. பகலில் நிலவிய வெப்பக் காற்றுடன் கூடிய, புழுக்கமும் குறைந்தது. பிற்பகலில் ஈரப்பதமான கடற்காற்றுஅதிகரித்துள்ளது. இன்றைய வெயில், அதிகபட்சமாக, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்