Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சிற்றம்பலம் அருகே, அரசு மரங்கள் வெட்டி கடத்தல்; கலெக்டரை சந்தித்து முறையிட கிராம மக்கள் முடிவு

மே 26, 2020 06:43

தஞ்சை: திருச்சிற்றம்பலம் அருகே அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய கிராம மக்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள ஆனந்தவள்ளி வாய்க்கால் கரைகளிலும், இதே பகுதியில் உள்ள குளக்குடி குளக்கரைகளிலும் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை ஆவணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் வெட்டப்பட்ட மரங்களை ஏற்றி நின்று கொண்டிருந்த லாரி ஒரு கிரேன் ஆகியவற்றை கிராம மக்கள் பறிமுதல் செய்து முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரையும் கிராம மக்கள் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்காக விடப்பட்ட பழைய கட்டிங் ஆர்டர்களை(வெட்டுவதற்கான உத்தரவு) வைத்துக்கொண்டு ஆவணத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான மரங்களை தற்போது வெட்டி தூத்துக்குடிக்கு 42 டன் மரங்கள்(பல்வேறு வகையான 84 மரங்கள்) வரை ஏற்றி அனுப்பியதை அவர்கள் கிராம மக்களிடம் ஒப்புக்கொண்டனர். இந்த தகவலை கேட்டு கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பேராவூரணி பொதுப்பணித்துறை மற்றும் தஞ்சை மாவட்ட வனத்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடங்களை பார்வையிட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து லாரியையும் கிரேனையும் அதிகாரிகள் முன்னிலையில் கிராம மக்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தஞ்சை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவிக்க ஆவணம் தயாராகி வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அரசியல் பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரடி தொடர்பு

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேராவூரணி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரசன்னா திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதாகவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்