Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா லாக்-டவுன்: சாலை விபத்துகளில் இதுவரை 196 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்

மே 26, 2020 07:31

புதுடெல்லி: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா லாக்-டவுன் காலத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மட்டும் 196 இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். 866 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் லாக்-டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை லாக்டவுனை எதிர்கொள்ளாத நிலையில் பிற மாநிலங்களில் பணிபுரிந்த இடம்பெயர் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதுவரை அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்கள் வேலை இல்லை என்றது. எஞ்சிய ஊதியத்தை தர மறுத்தன. இதனால் பிற மாநிலங்களில் திடீரென நிர்கதியாய் கைவிடப்பட்ட நிலையில் இடம்பெயர் தொழிலாளர்கள் பரிதவித்தனர். குடும்பத்துடன் பட்டினி கிடக்க வேண்டிய நிலையில் பிறரது உதவி மட்டுமே அவர்கள் உயிர்வாழ உதவுவதாக இருந்தது.

இந்த துயரச் சூழலில் தொடர்ந்து வாழ முடியாதவர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். பொது போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என பல்லாயிரக்கணக்கானோர் முடிவெடுத்தனர். கிடைத்த வாகனங்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. சைக்கிளில் பெற்றோருடன் ஊருக்கு புறப்பட்டவர்களும் உண்டு.

ஆனால், இப்படி கிளம்பியவர்கள் அத்தனை பேரும் தாய்நிலத்தை மிதித்துவிடவும் இல்லை. செல்லும் வழியில் கொடும் பட்டினிக்கு இரையானவர்கள் உண்டு. அவர்களைப் பற்றி எந்த ஒரு புள்ளி விவரமும் இல்லை. செல்லும் வழியில் விபத்துகளில் சிக்கி இறந்தவர்கள் ஏராளம். SaveLife Foundation என்ற அமைப்பின் புள்ளிவிவரப்படி சொந்த ஊர் திரும்பியவர்களில் 196 பேர் விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

அதாவது லாக்டவுன் காலத்தில் மொத்தம் 1061 பேர் மரணித்துள்ளதாகவும் இதில் 196 பேர் அதாவது 33% விபத்துகளால் உயிரிழந்துள்ளனர் என்கிறது இந்த அமைப்பு. 

வாகன விபத்துகள் அல்லாமல் சாலைகளில் நடந்து ஊருக்கு சென்றபோது மரணித்தவர்கள் 370 பேர் என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் 274 பேர் சாலை விபத்துகளில் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது அப்புள்ளிவிவரம்.

தலைப்புச்செய்திகள்