Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்லையில் நிலவும் பதற்றம்: இந்தியாவிலுள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைக்கும் சீனா

மே 26, 2020 07:35

புதுடெல்லி: இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுநோய்க்கு இடையே, இங்குள்ள தனது தனது குடிமக்களை அழைத்துச் செல்ல சீனா திட்டமிட்டுள்ளது. டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரக இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் சிறப்பு விமானங்களில் சீனாவுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது குடிமக்கள், சீனா திரும்ப மே 27 காலைக்குள், பதிவு செய்யுமாறு அந்த நாட்டு தூதரகம், இந்த உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.

"வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய துறைகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டின் கீழ், இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் இந்தியாவில் உள்ள மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவுகின்றன. திரும்பப் தாயகம் திரும்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்," என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும் கூட நாடு திரும்ப வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து எப்போது புறப்படும் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

அழைத்துச் செல்லப்படும் சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். சீனாவிற்கு சென்றதும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகியுள்ளோர், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஆனால் இப்போது, சீனா, நமது நாட்டிலிருந்து அவர்கள் குடிமக்களை அழைத்துச் செல்கிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக, இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இந்திய ராணுவமும் கூடுதல் படைகளை குவித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் மோதல் அதிகரித்துள்ள நிலையில், தனது குடிமக்களை சீனா அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்