Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள கூடாது: ஓ.பி.எஸ்.க்கு மருத்துவர்கள் அறிவுரை

மே 26, 2020 07:45

சென்னை: சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் முழு உடற்பரிசோதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மருத்துவர்கள் குழு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. பயணத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். எதையாவது நினைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள கூடாது எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார். சுமார் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்த அவருக்கு முழு உடற்பரிசோதனையை நடத்தி முடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அதில் அச்சப்படக் கூடிய அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் ஓ.பி.எஸ். குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஓ.பி.எஸ். மருத்துவமனை வரை சென்றதற்கு காரணமே கடந்த ஞயிற்றுக்கிழமை பிற்பகல் அவருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கம் தான். தொடர்ந்து தலைசுற்றல் இருந்ததால் உடனடியாக மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். இந்த தகவல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட யாருக்குமே தெரியாது. இந்நிலையில் இது தேவையற்ற சர்ச்சைக்கு வழிவகுக்கும் எனக் கருதிய மருத்துவமனை நிர்வாகம் நேற்றுமுன்தினம் காலை காலை 11 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிட்டது.

இதனிடையே ஓ.பி.எஸ். உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் அறிவதற்காக அவரது நீண்ட நாள் ஆதரவாளரும், தேனி மாவட்ட முன்னணி நிர்வாகியுமான ஒருவர் தெரிவித்ததாவது:
அவருக்கு அலைச்சல் அதிகம், அதனால் தான் இந்த பிரச்சனை. இப்போது கொரோனா காலம் என்பதால் தேனிக்கும், சென்னைக்கும் இடையே கூட அவர் காரில் தான் சென்று வருகிறார். தொடர்ந்து சுற்றுவதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. வேறொன்றுமில்லை. இனி அண்ணனை அதிகம் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதேபோல் யோகா செய்யச்சொல்லி இருக்கிறார்கள், மன அழுத்தம் ஏற்படும் வகையில் எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஓ.பி.எஸ். ஓய்வில் உள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு செல்ஃபோனிலோ, நேரிலோ யாரும் நலம் விசாரிக்க வேண்டாம் என அவரது தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்