Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக விலகலை கடைபிடிக்காத, சந்திரபாபு நாயடு தனிமைபடுத்தப்பட வேண்டும்: ஒய்.எஸ்.ஆர் கட்சி வலியுறுத்தல்

மே 26, 2020 10:27

அமராவதி: சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்த சந்திரபாபுவுக்கு, அவரது கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால், அவரை தனிமைப்படுத்த வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்., கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு சாலை மார்க்கமாக வந்துள்ளார். அவரது தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் தொண்டர்கள், சந்திரபாபுவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உள்ளூர் விமான சேவையும் தொடங்கியுள்ளது. அப்படி இருந்தும், சமூக விலகலை கடைப்பிடிக்காமல் கட்சியினர் கூட்டமாக வரவேற்றது சர்ச்சையானது. இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்., கட்சி கண்டனம் தெரிவித்ததுடன், சந்திரபாபுவை தனிமைப்படுத்தவும் வலியுறுத்தியது.

இது குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் கடிகோடா ஸ்ரீகாந்த் ரெட்டி கூறியதாவது: மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுகளை மொத்த நாடும் பின்பற்றி வருகிறது. ஆனால் ஐதராபாத்திலிருந்து வந்த சந்திரபாபுவுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சமூக விலகல் நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் மலர் தூவி வரவேற்றுள்ளனர். அவரை வரவேற்றவர்கள் மாஸ்க் கூட போட்டிருக்கவில்லை. ஒரு மூத்த அரசியல் தலைவராக இருந்து கொண்டு அவரால் எப்படி இதுபோன்ற காரியத்தில் ஈடுபட முடிகிறது?. சந்திரபாபு, கொரோனா பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலத்திலிருந்து வந்துள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுகிறார். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு வந்துள்ள அவர் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்