Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்?

மே 26, 2020 10:48

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமலாக்க உள்ளதாக பரவிய செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. தற்போது நாட்டிலேயே கொரோனாவால் மிக மோசமாக மகாராஷ்டிரா மாநிலம்தான் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் மும்பையில்தான் உச்சகட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவை தடுக்க மகாராஷ்டிரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் பா.ஜ.க. தலைவர்கள், பொறுத்திருந்து பாருங்கள்.. காலம் கனிகிறது.. எல்லாம் நடக்கப் போகிறது என பூடகமாகவே பத்திரிகையாளர்களிடம் கூறி வருகின்றனர். இதற்கு ஏற்ப திடீரென ஆளுநர் கோஷ்யாரியை தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். இதனால் மகாராஷ்டிராவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசும் பா.ஜ.க.வும் முயற்சிக்கிறது. ஆனால் நிச்சயம் அவர்களால் இந்த சதியில் வெல்ல முடியாது” என காட்டமாக கூறினார். முன்னதாக உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்ததார்.

‘மகாராஷ்டிராவின் ஆட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து ஆளுநர் தலையிடுகிறார்’ என தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது. இன்னொரு பக்கம், ‘மகாராஷ்டிரா அரசு கொரோனா விவகாரத்தை சரியாக கையாளவில்லை’ என பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு, ஜனாதிபதி ஆட்சி அமல் என பரபரப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்