Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடிக்கு கோவில்: உத்தரகண்ட் பா.ஜ., எம்.எல்.ஏ., திட்டம்

மே 27, 2020 06:27

ஹரித்வார்: பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., கணேஷ் ஜோஷி திட்டமிட்டுள்ளார்.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடவுள் அனுமாரை புகழ்ந்து சொல்லப்படும், ‘அனுமன் ஆரத்தி’ சுலோகம் போல், பிரதமர், மோடியை புகழ்ந்து, உத்தரகண்டில், பா.ஜ., தொண்டர் ஒருவர், ‘மோடி ஆரத்தி’ என்ற பெயரில், சுலோகம் 
எழுதியுள்ளார். இதில், ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவை ரத்த செய்தது; அமெரிக்காவுக்கு ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ மாத்திரைகளை வழங்கியது, ஊழலை ஒழிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் உட்பட, பிரதமரின் சாதனைகள் புகழப்பட்டுள்ளன.

மோடி ஆரத்தி வெளியிட்டு விழா, கடந்த, 22ம் தேதி, ஹரித்வாரில் நடந்தது. இந்த விழாவில், பா.ஜ., - எம்.எல்.ஏ., கணேஷ் ஜோஷி முன்னிலையில், மாநில உயர் கல்வி அமைச்சர், தன் சிங் ராவத் அதை வெளியிட்டார். இந்நிலையில், எம்.எல்.ஏ., கணேஷ் ஜோஷி, தனியார், ‘டிவி’ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:பிரதமர், மோடி தான் எனக்கு கடவுள். நான் தினமும், மோடியை வழிபடுகிறேன். அவர் தான் எனக்கு, நம்பிக்கை யும், சக்தியும் அளிக்கிறார். அவரைப் புகழ்வதில் என்ன தவறு! அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட, மோடியின் திறமையைப் பார்த்து அதிசயிக்கிறார். மோடி ஆரத்தியை வெளியிட்டதில், எந்த தவறும் இல்லை. விரைவில் கோவில் ஒன்று கட்டி, அதில், மோடி சிலை வைத்து வழிபடும் திட்டம் வைத்து உள்ளேன்.வைரஸ் பரவல் தடுக்கப்பட்ட பின், மோடி சிலையை செய்யும் பணியை துவக்குவேன். தினமும், 18 மணி நேரம் பணியாற்றும் பிரதமர் மோடி, தெய்வ அருள் பெற்றவர். இவ்வாறு, அவர் கூறினார்.

உத்தரகண்ட் மாநில காங்., துணைத் தலைவர், சூர்யகாந்த் தாஸ்மனா கூறுகையில், ‘’மத உணர்வுகளை துாண்டுவது, பா.ஜ.,வினரின் பிறவிக் குணம். பா.ஜ.,வில், ‘குருட்டு பக்தர்கள்’ அதிகம் உள்ளனர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
 

தலைப்புச்செய்திகள்