Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் முன்னிலையில் 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு

மே 27, 2020 06:47

சென்னை: வெளிநாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான், கொரியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் காணொலி வாயிலாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த தொழில் முதலீடுகளால் தமிழகத்தில் 47150 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்