Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் 50,000 பேருக்கு வேலை: அமேசான் அறிவிப்பு

மே 27, 2020 10:02

ஹைதராபாத்: தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்த நிறுவனங்கள் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அமேசான் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் களமிறங்கிய அமேசான் நிறுவனம் ஹைதராபாத்திலிருந்துதான் தனது வேவையை தொடங்கியது. தற்போது, அந்நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமேசான் தனது சொந்த நாட்டை விட இந்தியாவில் தான் அதிக அளவு ஊழியர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து 1.55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமேசானுக்காக இந்தியாவில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் டெலிவரி சேவையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவையில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. சுமார், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆன்லைன் டெலிவரி சேவை தொடங்கியுள்ளதால் பொதுமக்களும் அதிகமாக ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர். எனவே, டோர் டெலிவரி மற்றும் இதர சேவைகளுக்கு பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அமேசான் நிறுவனம் அதிகமான ஆட்களை பணியில் அமர்த்த முடிவுசெய்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் அதிக முதலீடு செய்து வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்ப்பதில் மும்முரமாகச் செயல்படும் அமேசான் நிறுவனம், தற்போது, ஊரடங்கு காலத்தில் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை விட சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்