Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 நாளாக பற்றி எரியும் உத்தரகாண்ட் காடுகள்: அரிய வகை விலங்குகள் அழியும் அபாயம்

மே 27, 2020 10:04

புதுடெல்லி: கொரோனா ஒருபக்கம் தாக்கும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீயால் பெரும் சேதத்தை வனங்கள் சந்தித்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதால், உத்தரகாண்ட் மாநிலத்தின் வன வளம், அரிய வகை விலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் வெட்டுக்கிளி படையெடுப்பையும் சேர்த்து சந்தித்து தவித்துக் கொண்டுள்ளது. மறுபக்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக எரிந்து கொண்டுள்ள காட்டுத் தீயால் பெருமளவில் வன இழப்பு ஏற்பட்டுள்ளது . தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

வட இந்தியாவில் ஏற்கனவே கடும் வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடும் வெயில் நிலவுகிறது. அனலைத் தாங்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் உத்தரகாண்ட் காட்டுத் தீயும் சேர்ந்துள்ளது.

இந்த கடும் வெயில் மற்றும் அனல் காரணமாகத்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீ பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் வராமல் இருக்க இந்த கடும் வெயிலும் முக்கியக் காரணமாகும். பல ஏக்கர் பசுமையான வனப் பகுதிகள் கருகின. ஏராளமான வன விலங்குகளும் தீயில் கருகிவிட்டன. உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 46 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பற்றி எரிந்து கொண்டுள்ளது. குமான் பிராந்தியத்தில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு மட்டும் 12 இடங்களில் தீப்பிடித்து எரிகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 51.43 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதிகள் இதுவரை தீயில் கருகிவிட்டன. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட அரிய வகை விலங்குகளும் தற்போது அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அமேஸான் வனப்பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயில் பல அரிய வகை விலங்குகள் கருகிப் போயின. பெருமளவிலான காட்டுப் பகுதியும் கருகிப் போனது. அதே போலத்தான் ஆஸ்திரேலியாவிலும் மிகப் பெரிய காட்டுத் தீவிபத்தை உலகம் பார்த்தது. தற்போது அழகான உத்தரகாண்ட் மாநிலத்தின் வனப்பகுதி தொடர்ந்து எரிந்து கருகிக் கொண்டிருக்கிறது. தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் உத்தரகாண்ட் வன வளம் பெரும் சேதத்தை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்