Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாரிசே இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா; உயில் இல்லாததால் தீபா வாரிசு கிடையாது: புகழேந்தி

மே 27, 2020 10:19

சென்னை: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகள் தீபா அல்லது தீபக் வாரிசாக முடியாது,  வாரிசே இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா,” என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜனார்த்தனம், புகழேந்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருபாகரன் தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் இவரை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்துள்ளது.

இதை தீபா வரவேற்று பேட்டியளித்தார். ஆனால், புகழேந்தி இதில் உடன்பாடு இல்லை என கூறியுள்ளார். இதுதொடர்பாக புகழேந்தி தெரிவித்ததாவது:
இந்த வழக்கு தொடர்பாக 15 வருடங்களாக மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நான் பணியாற்றியுள்ளேன் என்பதால் வழக்கின் முழு விபரமும் எனக்கு தெரியும். ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று முதல் கோரிக்கையை வைத்தது நான்தான். ஜெயலலிதாவின் வாரிசு என்று உயர்நீதிமன்றத்தில் தீபா தரப்பு கூறியுள்ளது. எந்த இடத்தில் இவர்கள் வாரிசுதாரர்கள்? ஜெயலலிதாவின் தாயார் சந்தியா ஜெயலலிதாவுக்கு ஒரு உயில் எழுதி வைத்தார். ஆனால், ஜெயலலிதா எந்த ஒரு உயிலும் எழுதவில்லை. தனக்கு வாரிசு இல்லை என்பதை வழக்கு மன்றங்களில் தெரிவித்துள்ளார். பிற இடங்களிலும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால், நீதிமன்றம் ரத்த சம்பந்தமான சொந்தம் என்ற அடிப்படையில், தீபா, தீபக் ஆகியோர் வாரிசு என்று அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் மேல்முறையீடு செய்வதற்கும், மேல் வாதங்களை எடுத்து வைப்பதற்கு அதிகாரம் இருக்கிறது. கண்டிப்பாக இது இறுதி தீர்ப்பு கிடையாது. இதில், பல சட்ட சிக்கல் உள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்றபோது, இந்த வீட்டுக்கு பராமரிப்பு செலவு 7 கோடி ரூபாய் என்று ஜெயலலிதாவால் கணக்கு காட்டப்பட்டது.

நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில், ‘இந்த வீட்டை அரசு எடுத்துக் கொள்ளலாம்’ என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு பல்வேறு சட்ட சிக்கல்கள் இந்த விஷயத்தில் இருப்பதால் சட்டரீதியாக இதை எதிர்கொண்டு ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும். இது இடைக்காலத் தீர்ப்பு தான் என்பதால் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்