Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவை கட்டுப்படுத்த நிதியுதவி, மருத்துவ உபகரணங்கள் தேவை: நாராயணசாமி

மே 27, 2020 10:46

புதுச்சேரி: “கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு தேவையான நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை உடனடியாக மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததாவது:

கொரோனா தொற்றை பொறுத்தவரை அனுபவ ரீதியாக பல தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது பெரிய கவலையை தருகிறது. புதுச்சேரியில் உள்ள 33 பேரில் 32 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தாலும் அவர்கள் திடகாத்திரமாக உள்ளனர். அவர்கள் உடல் நலம் தேறி வருகிறது. வியாதி உள்ளவர்களின் உயிருக்கு மட்டும் கொரோனா தொற்று ஆபத்து ஏற்படும் என்றும், கொரோனா தொற்று நோயானது இன்னும் 2 மாதங்களுக்கு மிகப்பெரிய அளவில் பரவும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.

மத்திய அரசு ஒருபுறம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உதவ வேண்டும். இன்னொரு புறம் பொருளாதாரம் மேம்பட உதவ வேண்டும். ஆனால், இரண்டையும் மத்திய அரசு செய்யவில்லை. புதுச்சேரியில் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதால் மத்திய அரசு நமக்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரம் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொடுக்கவில்லை. தற்போது காரைக்கால், ஏனாம் பச்சை மண்டலமாகவும், புதுச்சேரி, மாகே ஆரஞ்சு மண்டலமாக உள்ளது.

இந்த நிலையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருந்தால்தான் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனவே, மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ உபகரணங்களை அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதேபோல் மாநிலத்துக்கு தேவயைான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

ஏழை மக்களின் வங்கி கணக்கில் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் போட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.7,500 என்ற முறையில் 5 மாதங்கள் போட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான நிதியுதவி அளித்து அவர்களது வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக மாநிலங்களுக்கு நிதியுதவி, மருத்துவ உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்