Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எம்.பி.,க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது: டி.ஜி.பி.,யிடம் திமுக புகார்

மே 28, 2020 05:35

சென்னை : 'அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது; அதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, தி.மு.க., இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில், பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில், நீதிபதிகள் நியமனம் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில், தி.மு.க., - எம்.பி., - எஸ்.ஆர்.பாரதி பேசியதாக செய்தி பரவியது. இது தொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சியின் நிர்வாகி கல்யாணசுந்தரம், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, மே, 23ல், எஸ்.ஆர்.பாரதி கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள், டி.ஆர்.பாலு, தயாநிதி உள்ளிட்டோர், தலைமை செயலரிடம் மனு அளித்தனர். பின், அவர்கள் அளித்த பேட்டியில், 'தலைமை செயலர், தங்களை தாழ்த்தப்பட்டோர் போல நடத்தினார்' என, குற்றம் சாட்டினர். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தரப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க., முதன்மை செயலர் நேரு, டி.ஜி.பி., அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள மனு: தி.மு.க., - எம்.பி.,க்கள், டி.ஆர்.பாலு, தயாநிதி மற்றும் எஸ்.ஆர்.பாரதி மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது, திட்டமிட்டு நடத்தப்படுகிற சதிச்செயல்.

கோவை, வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில், ஜெகநாதன் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், டி.ஆர்.பாலுவின் பெயர் இல்லை. இதனால், சேகர் என்பவர், துடியலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பான வழக்கில், தயாநிதியுடன், டி.ஆர்.பாலுவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

பாரதி, தயாநிதி மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர், தங்கள் பேச்சில் உள்நோக்கம் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர். முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.

டி.ஆர்.பாலு, தயாநிதி மற்றும் எஸ்.ஆர்.பாரதி உள்ளிட்டோர், தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, திட்டமிட்டு, அ.தி.மு.க.,வினரின் துாண்டுதலில் புகார் அளிக்கப்படுகிறது, போலீசார், பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்; அதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்