Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுலை எதுவரை நம்பலாம்?

மார்ச் 15, 2019 05:34

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒருநாள் பயணமாக தமிழகம் வந்து போனார். சென்னையில் மகளிர் கல்லூரியில் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அடுத்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். மாணவிகளுடன் ராகுல் சந்திப்பு நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி.  

என்னை சார் என்று அழைக்காதீர்கள்; ராகுல் என்றே அழையுங்கள். அதுதான் எனக்கு பிடிக்கும்.. கடினமான கேள்விகளைக் கேட்டு என்னை திணற வையுங்கள்..அரசியல் தலைவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளவே இந்த சந்திப்பு.. 

லட்சுமி மேனன் எதிர்பாராத விதமாக ராபர்ட் வாத்ரா மீதான ஊழல் புகார் குறித்து கேட்டபோது சற்று ஆடித்தான் போனார் ராகுல்.அதுவரை அவர் முகத்தில் படர்ந்திருந்த புன்னகை சட்டென விடைபெற்று, இறுக்கம் குடியேறியது. என்றாலும் சமாளித்தவர், ரபேல் குறித்தான பழைய புகார்களை மீண்டும் வாசிக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். எனினும், ரபேல் விவகாரத்தில் மோடி சிறை செல்ல நேரிடும் என்று எச்சரிக்கத் தெரிந்த ராகுலுக்கு, தப்பித்தவறி காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்று சொல்லத் தோன்றவில்லை. அதனால்தான் அவரது மிரட்டலை பிரதமர் வேட்பாளர் பேச்சாக எடுத்துக் கொள்ள இயலவில்லை; ஒரு வண்டு முருகனின் வாய்ச் சவடாலாக பார்க்கத் தோன்றுகிறது. 

மோடி மீதான அன்பை வெளிப்படுத்தவே, பார்லிமென்டில் அவரை கட்டித்தழுவியதாக ஒரு கேள்விக்கு பதிலளித்த ராகுல், அன்பு பாசம் பற்றி மாணவிகளுக்கு ஒரு பாடமே நடத்தி விட்டார். எல்லாம் சரிதான் ராகுல், அன்பின் வெளிப்பாடாக பிரதமரை கட்டிப் பிடித்தது உண்மை என்றால், அது முடிந்து உங்கள் இருக்கையில் போய் அமர்ந்ததும் உலகமே பார்க்கும் வகையில் கேமராவைப் பார்த்து கண்ணடித்தீர்களே, அதன் உட்பொருள் என்ன என்று எந்த மாணவியும் கேட்க வாய்ப்பில்லாமல் போயிற்று. 
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ராகுல் எப்போதுமே பாதி உண்மையை மட்டுமே பேசும் பழக்கம் கொண்டவர் என்பது தெளிவாகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் பளபளப்பாக தோன்றும் பல விஷயங்கள் ஆழமாக ஆராயும்போது அருவருப்பாக தெரிவதைப் போல், ராகுலின் பதில்கள் எல்லாமே சத்திய சோதனையில் தோற்றுப் போகின்றன. ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார்: அதோ போகிறாரே, அவரை ஐந்து லட்சம் வரை நம்பலாம் என்று. ராகுல் பதில்களைக் கேட்டால் அந்த நண்பர் இப்படி சொல்லக்கூடும் இவரை பாதி வரை நம்பலாம்! 

 

தலைப்புச்செய்திகள்