Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்டம் விட்டு மாவட்டம் உரிமையாளரை சுமந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட குதிரை

மே 28, 2020 09:10

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இருந்து ரஜௌரிக்கு உரிமையாளரை சுமந்து சென்றதால் குதிரை ஒன்று கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது தற்போது எங்கு பார்த்தாலும் நம் காதுகளில் கேட்கும் வார்த்தை தனிமைப்படுத்துதல் தான். ஒருவர் கொரோனா பாதித்த பகுதியில் இருந்து வந்தாலோ கொரோனா பாதித்த நபர்களுடன் பழகியிருந்தாலோ, ஒருவருக்கு கொரோனா உறுதியானாலோ அவர் தனிமைப்படுத்தப்படுவர். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை தனிமைப்படுத்துதல்தான் இதற்கு தீர்வு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலக நாடுகளில் அனைத்திலும் மனிதர்களை தனிமைப்படுத்தி கேள்விப்பட்டுள்ளோம்.

ஆனால், காஷ்மீரில் ஒரு குதிரையை தனிமைப்படுத்திய சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு பகுதியில் ரஜௌரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குதிரையை வளர்த்து வந்தார். இந்நிலையில் அவர் சோபியான் மாவட்டத்திலிருந்து ரஜௌரி பகுதிக்கு செல்ல விரும்பினார். சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிகப்பு மண்டல பகுதிகளாகும்.

ஆனால், ரஜௌரியோ பச்சை மண்டல பகுதியாகும். இதனால் சோபியானில் இருந்து பச்சை மண்டலமான ரஜௌரிக்கு செல்ல வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், ரஜௌரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சோபியானிலிருந்து ரஜௌரிக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி ஏதும் பெறாமல் குதிரையில் பயணம் செய்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை இரவு குதிரையில் கிளம்பிய இவர் முகல் சாலை வழியாக ரஜௌரிக்கு வந்தார். கடும் குளிர் நிலவுவதால் அந்த சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் எந்த வாகன போக்குவரத்தும் இயக்கப்படவில்லை. எனவே, எந்த இடையூறுமின்றி வேகமாக சென்ற அவர் மாவட்ட எல்லையில் சிக்கினார்.

அப்போது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி குதிரையையும் அந்த நபரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை அந்த நபர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது போல் குதிரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வாய் கட்டப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்