Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனுஷ்கோடி சாலையை நெருங்கி வரும் கடல்நீர்: தடுப்புச்சுவரை பலப்படுத்த கோரிக்கை

மே 29, 2020 09:19

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி செல்லும் சாலையை கடல் நீரானது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைக்கு ஆபத்து வருவதற்குள் ஊரடங்கினால் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்புச்சுவரை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ரூ.60 கோடி நிதியில் ராமேசுவரம் அருகே முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 9 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பாதிக்கப்படாமல் இருக்க இருபுறமும் பெரிய கற்களால் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. தனுஷ்கோடி வரையிலும் போடப்பட்ட இந்த சாலையானது கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் சமீபத்தில் வங்கக்கடலில் உருவான உம்பன் புயலால் தனுஷ்கோடி கடல் சீற்றமாக இருந்தது. புயல் கரையை கடந்த பின்பும் கடந்த 3 நாட்களாக கடல் நீரோட்டத்தின் வேகம் குறையவில்லை. கடல் நீரோட்டத்தின் வேகத்தால் அரிச்சல்முனை தெற்கு கடற்கரையில் மணல்பரப்பே இல்லாத அளவிற்கு அந்த பகுதி முழுவதும் கடல் நீரால் சூழ்ந்து காட்சியளித்து வருகின்றது.

பல இடங்களில் கடல் நீரானது சாலையை நெருங்கி வந்துவிட்டது. மேலும் அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் படிக்கட்டுகள் வழியாக கடற்கரை பகுதிக்கு இறங்கி செல்லும் பகுதி வரையிலும் கடல் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் அங்குள்ள தடுப்பு சுவரின் கற்களும் சரிந்து கடலில் விழுந்து கிடக்கின்றன. கடலில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என எழுதி கடற்கரையில் போலீசாரால் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகைகளும் கடல் நீரோட்ட வேகத்தால் சேதமாகி விழுந்து கிடக்கின்றன.

கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியிலும் பல இடங்களில் கடல் நீரோட்டத்தின் வேகத்தால் ஏற்பட்ட மண் அரிப்பால் தடுப்பு சுவருக்காக கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய கற்களும் விழுந்து கிடக்கின்றன. இதே நிலை தொடரும் பட்சத்தில் சாலைக்கும் கடல் நீர் வர வாய்ப்புள்ளது. 

எனவே ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தெற்கு கடற்கரை சாலையோரத்தில் தடுப்பு சுவரின் பலத்தை அதிகரிக்க கூடுதலாக கற்களை குவிக்க வேண்டும் என்றும் அரிச்சல்முனை தடுப்பு சுவரை பலப்படுத்தவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்