Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 35 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

மே 29, 2020 09:34

தஞ்சை: அய்யம்பேட்டை அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 35 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ள கணபதி அக்ரஹாரம் - அய்யம்பேட்டை சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பு சாலையாகும். இந்த சாலை தஞ்சை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையுடன் திருவையாறு - கும்பகோணம் சாலையை இணைக்கிறது.
கணபதி அக்ரஹாரம் காவிரி ஆற்றின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக 80 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் வழியே கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், பட்டுக்குடி, உள்ளிக்கடை, புத்தூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் இந்த பாலத்தின் வழியே சென்று வருகின்றன. விவசாயிகள் பலரும் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்காக இந்த பாலத்தின் வழியே கொண்டு செல்கின்றனர்.

3 மினி பஸ்களும் ஒரு அரசு பஸ்சும் இந்த பாலத்தின் வழியே சென்று வருகின்றன. தொழிலாளர்கள் பலர் இந்த பாலத்தின் வழியே 2 சக்கர வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாலம் காலப்போக்கில் வலுவிழந்து போனது. மேலும் ஒரு வழி பாதையான இந்த பாலத்தில் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனால் இந்த பாலத்துக்கு அருகிலேயே புதிய பாலம் கட்டும் பணிக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 35 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த ஆண்டு பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்த பாலம் 174.2 மீட்டர் நீளத்திலும், 9.95 மீட்டர் அகலத்திலும், 12 தூண்களுடனும் கட்டப்படுகிறது. பாலம் கட்டும் பணிகளை நபார்டு மற்றும் கிராம சாலைகள் தஞ்சை கோட்ட பொறியாளர் கலைவாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

தலைப்புச்செய்திகள்