Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நோயாளிகளுக்கு, பிரியாணி வழங்கிய சென்னை மாநகராட்சி

மே 30, 2020 08:15

சென்னை: வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கி மாநகராட்சி இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரிகள், தனிமைப்படுத்தப்பட்ட தனியார் இடங்கள், வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தங்கி டாக்டர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை பெறுகிறார்கள்.

 இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் மன அழுத்ததை போக்கும் வகையில் சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் இயங்கும் மனநல ஆலோசனை மையத்தில் இருந்து டாக்டர்கள் அவ்வப்போது செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். தன்னார்வலர்களும் தாமாக முன் வந்து தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இளம்பெண் ஒருவர், ‘சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு, ‘எனக்கு இன்று பிறந்தநாள். ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் யாரும் எனக்கு வாழ்த்து கூறவில்லை’ என்று கவலையுடன் கூறினார். இதையடுத்து ஆலோசனை மையத்தில் இருந்த அனைவரும் தொலைபேசி மூலம் அந்த பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் சென்னை தண்டையார்ப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 வாலிபர்களிடம், ‘மாநகராட்சி ஆலோசனை மையத்தில் இருந்து ஊழியர் ஒருவர் நேற்று காலை தொலைபேசியில் நலம் விசாரித்தார். அப்போது அவர்கள், ‘நாங்கள் நல்லா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறது’ என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் அவர்களுடைய செல்போன் எண்ணிற்கு மாநகராட்சி ஊழியரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய ஊழியர், ‘உங்கள் வீட்டு கதவை திறங்கள்’ என்றார். உடனே அவர்கள் கதவை திறந்த போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்து. ‘சுடசுட 3 பிரியாணி பொட்டலங்களும், இறைச்சி உணவுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அவர்களிடம் வழங்கினர்.

மாநகராட்சி மனநல ஆலோசனை மைய அதிகாரி, ‘உங்களுக்கு இதனை வழங்க சொன்னார்’ என்று அவர்கள் தெரிவித்தனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமின்றி அவர்களுடைய ஆசையையும் மாநகராட்சி அதிகாரிகள் நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது ஆகும்.

தலைப்புச்செய்திகள்