Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி.,யில் கொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை தூக்கி சென்ற குரங்குகள்

மே 31, 2020 05:12

லக்னோ: உ.பி.,யில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரிகளை குரங்குகள் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி., மாநிலம் மீரட் மருத்துவ கல்லூரியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. மருத்துவமனையில் நோயாளிகளிடம் உணவு பொருட்களை பறிப்பது, அவர்களை தாக்குவது உள்ளிட்ட சேட்டைகளை செய்து வந்த குரங்குகள், உணவு என நினைத்து கொரோனாவால் பாதிக்கப்ட்டவரின் ரத்த மாதிரிகளை தூக்கி சென்றன.

லேப் டெக்னீசியனை தாக்கி அவரிடமிருந்து 3 ரத்த மாதிரிகளை பறித்த குரங்கு, அதனை உடைத்தன. மேலும் அறுவை சிகிச்சை செய்யும் கையுறைகளையும் அவைகள் சாப்பிட்டன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குரங்குகளுக்கு இதனால் கொரோனா பரவி விடுமோ என அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், 'குரங்குகள் பறித்து சென்றது கொரோனா ரத்த மாதிரிகள் அல்ல. கொரோனாவிலிருந்து மீண்டவர் மீண்டும் பரிசோதனைக்கு வந்த போது தந்த ரத்த மாதிரிகள் தான். அவரிடமிருந்து மீண்டும் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன' என தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்