Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்டலங்களுக்குள் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை: அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி

மே 31, 2020 08:09

சென்னை: தமிழக அரசு ஊரடங்கு விவகாரத்தில் 8 மண்டலங்களாக தமிழகத்தை பிரித்துள்ளது. அந்த 8 மண்டலங்களுக்குள் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல இ- பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

மதுரை மண்டலம், கோவை மண்டலம், வேலூர் மண்டலம், திருநெல்வேலி மண்டலம், விழுப்புரம் என 8 மண்டலங்களுக்குள் உள்ள மாவட்டங்களுக்குள் பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இ-பாஸ் தேவையில்லை. சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளை தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளது. ஆனால் மதுரை மண்டலம், கோவை மண்டலம், வேலூர் மண்டலம், திருநெல்வேலி மண்டலம், விழுப்புரம் மண்டலம் என மாவட்டங்களை பிரித்துள்ள அரசு, அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயங்கும் என அறிவித்துள்ளது.

சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை என்று அரசு அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து வகையான வாகனங்களும் மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ- பாஸ் தேவையில்லை. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் டி.என்.இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம். ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்