Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை: பிரதமர் மோடி நம்பிக்கை

மே 31, 2020 09:05

புதுடெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு வரும் ஜூன் 30ம் தேதி வரை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற
பகுதிகளில் பேருந்து, ரயில், விமானம் உள்பட அனைத்து போக்குவரத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

முன்னதாக ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். உணவுக்கு வழியில்லாமல் தவித்தனர். இதனால் அவர்கள் உயிர் தப்பித்தால் போதும் என்ற நினைப்பில் கால்நடையாக சொந்த ஊருக்கு அணிவகுத்து புறப்பட்டு சென்றனர். இப்படி சென்ற பலர் விபத்திலும், பசியாலும், வறுமையாலும், நடக்க முடியாமல் மயக்கம் அடைந்தும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மத்திய , மாநில அரசுகள் அவர்களை இலவசமாக சொந்த ஊருக்கு ரயில்களில் பேருந்துகளில் அனுப்பி வைத்து வருகின்றன. 

உச்ச நீதிமன்றம் புலம் பெயர் விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இந்நிலையில், மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கொரோனாவை எதிர்கொள்ளும் நாம், பொருளாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் விவசாயிகள் தாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வருவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

தலைப்புச்செய்திகள்