Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறது தேர்தல் ஆணையம்

ஜுன் 01, 2020 06:26

புதுடெல்லி : அமெரிக்கா சென்று, ஊரடங்கால் இந்தியா திரும்ப முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சமீபத்தில் நாடு திரும்பி விட்டார். இப்போது, அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில், அலுவலகம் வர ஆரம்பித்து விடுவார்.

நவம்பர் மாதம், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். இதையடுத்து, அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும். கொரோனா பரவலால், இந்த தேர்தல்கள் தள்ளிப் போகலாம் என, செய்திகள் அடிபட்டன. ஆனால், அதை பொய் என நிரூபிக்கும் வகையில், தலைமை தேர்தல் ஆணையம், அடுத்த வாரம் இதற்கான வேலைகளை துவக்க உள்ளது.

மூன்று தேர்தல் ஆணையர்களும், இந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக, ஓட்டுக்கு பணம் தருவதை எப்படி தடுப்பது; சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்துவது என, பல விஷயங்களை அலசி ஆராய உள்ளனர். இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகளோடும், ஆணையம் ஆலோசனை நடத்தும்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள், தமிழக தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்பது, தேர்தல் ஆணையத்தின் திட்டம். இதையடுத்து, தமிழகத்தில், ஏப்ரல் மாதத்தில், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்கின்றனர், தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

தலைப்புச்செய்திகள்