Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; வழிபாட்டு தலங்களை திறக்க அவகாசம் கேட்கும் நிர்வாகிகள்

ஜுன் 01, 2020 06:58

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், மத வழிபாட்டு தலங்களை, இன்று(ஜூன் 1) திறக்க அரசு அனுமதி அளித்தும், பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சிறிது கால அவகாசம் தேவை என, அவற்றின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கொரோனா ஊரடங்கால் மார்ச், 25 முதல் மூடப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை, இன்று முதல் திறக்கலாம் என, அம்மாநில முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். ஆனால், ஒரே நேரத்தில், 10 பக்தர்களை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என, கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வடக்கு கோல்கட்டாவின் பழமை வாய்ந்த தக்ஷினேஸ்வரர் கோவில் நிர்வாகி, குஷால் சவுத்ரி கூறியதாவது: கோவிலில், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், சிறிது காலம் தேவைப்படும். பக்தர்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், அதற்கென குழு அமைத்து, சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பேலுார் ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் கூறும்போது, 'தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், கோவில் வளாகத்தை, 15 முதல், 20 நாட்கள் வரை திறக்க மாட்டோம்' என்றனர்.

மாநில இமாம்கள் கூட்டமைப்பின் தலைவர், முகமது யாஹியாவின் அறிக்கை: மாநிலத்தில், 26 ஆயிரம் மசூதிகள் உள்ள நிலையில், முதல்வர் அறிவிப்பில், சில தெளிவுகளை பெற வேண்டியுள்ளது. தற்போது மசூதிகளுக்குள், ஒரு சிலர் மட்டும் தொழுகைக்கு அனுமதிக்கப்படும் நிலை தொடரும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, சிறிது கால அவகாசம் தேவை. அதுவரை, வீடுகளில் தொழுகைகள் தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கோல்கட்டா பேராயர், டொமினிக் கோம்ஸ் கூறும்போது, ''அரசின் முடிவை வரவேற்கிறோம். தேவாலயங்களில் ஒரே நேரத்தில், 10 பேரை அனுமதிப்பதற்கு முன், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்