Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியால் மும்பையில் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு

ஜுன் 01, 2020 07:05

மும்பை: குஜராத்திலும், மும்பையிலும், டில்லியிலும் கொரோனா வைரஸ் பரவியதற்கு, பிப்., மாதம் ஆமதாபாத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி தான் காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது: கொரோனா குஜராத்தில் தீவிரமாக பரவ அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அழைத்து வந்து பிரதமர் மோடி ஆமதாபாத்தில் நடத்திய 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. டிரம்புடன் வந்த அமெரிக்க அதிகாரிகள் சிலர், மும்பை, டில்லிக்கு பயணித்து கொரோனாவை பரப்பி விட்டார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால், மஹா.,வில் உத்தவ் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முயற்சித்தால் அது தற்கொலைக்கு சமம். அப்படி என்றால், பா.ஜ., ஆளும் மாநிலங்கள் உட்பட 17 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளது. சரியான திட்டமிடலும் இல்லை. காங்., எம்.பி., ராகுல், இதை ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். சரியாக திட்டமிடாமல் ஊரடங்கை அமல்படுத்திய மத்திய அரசு, தற்போதும் ஊரடங்கை தளர்த்தும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைத்துள்ளது. இது கொரோனா பரவலை மேலும் மோசமாக்கும்.

மஹா.,வில் உத்தவ் அரசு நிலையாக இருக்கும். இதனை உறுதியாக கூற முடியும். காங்., கட்சியும் கூட்டணியில் நீட்டிக்கும். எங்கள் கூட்டணியில் யாரும் குதிரை பேரத்தில் ஈடுபடமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிப்.,24ம் தேதி ஆமதாபாத்தில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்