Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீனாட்சி அம்மன் கோவில் யானை கண் நோயால் பாதிப்பு; டாக்டர்கள் சிகிச்சை

ஜுன் 02, 2020 10:13

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி கண் நோயால் பாதிக்கப்பட்டது. அந்த யானைக்கு கால்நடை டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழாவில் சுவாமி புறப்பாட்டின்போது டங்கா மாடு யானை போன்றவை முன்னே செல்வது வழக்கம். இதற்காக கோவிலில் பார்வதி என்ற பெயருடன் பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. சுமார் 24 வயதுள்ள அந்த யானை கோவில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பார்வதி யானை மண்டபத்தை விட்டு வெளியே வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது யானையின் இடது கண்ணில் புண் வந்துள்ளதாகவும் அதனால் அந்த கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருப்பதால் கண்ணில் வலி ஏற்பட்டு யானை சற்று சோர்வாக உள்ளதாக தெரியவந்தது.

இதற்கிடையே யானை உடல் நிலை பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து கால்நடை டாக்டர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அதில் யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை நோய் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கண்ணில் பார்வை சற்று மங்கி உள்ளதால் யானை சோர்வாக இருப்பதாக தெரியவந்தது. டாக்டர்கள் அதற்கான சிகிச்சை அளித்தனர்.

இதுதவிர அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் நேரில் வந்து யானை கண்களை பரிசோதனை செய்து, அவர்களும் அதற்குரிய மருந்துகளை வழங்கி விட்டு சென்றனர். மேலும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் கண் பிரிவு டாக்டர்களிடம் தற்போது யானையின் நிலை அதற்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து தெரிவித்தனர். 

இதற்கிடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று தான் புதிய இணை கமிஷனராக செல்லத்துரை பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவரும் நேரில் சென்று யானை நிலை குறித்து அங்கிருந்த பாகனிடம் கேட்டறிந்தார்.

தலைப்புச்செய்திகள்