Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவின் சுயமரியாதையை யாரும் சீண்டி பார்த்துவிட முடியாது: ராஜ்நாத் சிங் சவால்

ஜுன் 03, 2020 06:12

புதுடெல்லி: இந்தியாவின் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகில் சீனா ராணுவத்தை குவித்து வருவது உண்மைதான். ஆனால், இந்தியாவின் சுயமரியாதையை யாரும் சீண்டிப் பார்த்துவிட முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: ராணுவ தளபதி நரவனே, இது தொடர்பாக தனக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூன் 6ம் தேதி, இந்தியா மற்றும் சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் பரஸ்பரம் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது.

முன்னதாக, இந்திய எல்லைப் பகுதியில் சீனா அதிக அளவில் ராணுவத்தை குவித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மையக் பாம்பியோ தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியிருந்தார்.

பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் சீனா படைகளை குவிப்பதற்கான காரணத்தை யூகத்தின் அடிப்படையில் நாம் கூறிவிட முடியாது. பேச்சுவார்த்தை மூலமாக இந்தப் பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும் என்றுதான் சீனா தரப்பும் விரும்புகிறது.

இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிக்கு அதிகப்படியான ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் சுயமரியாதையை யாரும் சீண்டிப் பார்த்துவிட முடியாது. இந்தியா யாரையும் எதிரி நாடாக நினைக்கவில்லை. சீனாவும் அப்படித்தான். அது நமக்கு ஒரு அண்டை நாடு. பாகிஸ்தானும் நமது அண்டை நாடுதான். அதேநேரம் யாராவது நம்மை சீண்ட பார்த்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

இந்தியா மற்றும் சீனா இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அனைத்து வகை கட்டமைப்புகளும் சிறப்பாக இருக்கின்றன. எனவே, மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கூட பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்