Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிரா - குஜாராத் இடையே கரையை கடக்கும் நிசர்கா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ஜுன் 03, 2020 06:18

மும்பை: தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள 'நிசர்கா' புயல் இன்று பகல் மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது

இதனை தொடர்ந்து, மும்பையில் கடற்கரை ஒட்டிய பகுதிகள், பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜூன் 3) காலை முதல் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இன்று பிற்பகல் நிசர்கா புயல் கரையை கடப்பதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா, குஜராத், டாமன் & டியூ, தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மிக தீவிர புயலாக, நிசர்கா வலுப்பெறும். இதனால் மிக கனமழையும், மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

டிவி மூலம் பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மும்பையில், மக்கள் யாரும் இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். கடும் புயல் தாக்குவதால், மின்சாரம் துண்டிக்கப்படும். இதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். மின்னணு பொருட்களை சார்ஜ் வைத்து கொள்ளுவதுடன், அவசர விலக்குகளை தயார் நிலையில் வைத்து கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் தற்போது சந்தித்து வரும் பிரச்னையை விட புயல் பிரச்னை பெரிதாக இருக்கும். நாளையும், நாளை மறுநாளும் கடற்கரை ஒட்டிய பகுதிகளுக்கு முக்கியமான நாட்கள். ஊரடங்கில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வுகள் அடுத்த இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் எனக்கூறினார்.

மஹா., முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், மும்பையில் குடிசை பகுதியில் வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்காத மற்ற மருத்துவமனைகள், மருத்துவ உதவிக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் மின்சார தடை மற்றும் அணு உலைகள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகவும் மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கனமழை, நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்தால் அதனை கையாள குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. என தெரிவித்துள்ளது. தலைமை செயலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் வானிலை மையம் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மஹாராஷ்டிரா, குஜராத் மாநில முதல்வர்கள், டாமன் டியூ, தாத்ரா நாகர் ஹவேலி நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தேவையான உதவி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நிசர்கா புயல் காரணமாக மேற்கு கடற்கரையோர பகுதிகளில் உருவாகியுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தேன். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி கொள்கிறேன். தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய்ரூபானி மற்றும் டாமன் டியூ, தாத்ரா நாகர் ஹவேலி நிர்வாகங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தேவையான உதவி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உத்தவ் தாக்கரேயுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

புயலை எதிர்கொள்வதற்காக, 2 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் 40 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, உதவிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில், இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மீனவர்கள் மற்றும் சரக்கு கப்பல்களை உடனடியாக துறைமுகம் திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான அம்பான் புயல், மேற்கு வங்கம், ஒடிசாவை தாக்கியது. அதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லடசகணக்கானோரை தாக்கியது.

தலைப்புச்செய்திகள்