Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் 198 வகை கொரோனா வைரஸ்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

ஜுன் 04, 2020 06:27

புது டெல்லி: இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 198 வகை கொரோனா வைரஸ்கள் இருப்பதும், அவை இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ தங்கள் மரபணுக்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் டி.என்.ஏ வகைப்படுத்துதல் மையத்தைச் சேர்ந்த 7 விஞ்ஞானிகள், ஜிஐஎஸ்ஏஐடி (GISAID) என்ற உலகளாவிய மரபணு வங்கிக்கு மார்ச் முதல் மே இறுதி வரை இந்தியாவிலிருந்து வந்த மரபணுக்களை ஆய்வு செய்தனர். ஜூன் 2 அன்று, இந்த மரபணு வங்கியின் தரவுத்தளத்தில் 37,000-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரபணுக்கள் இருந்தன, அவற்றில் குறைந்தது 550 இந்தியாவிலிருந்து வந்தவை.
இதனை ஆராய்ந்த போது இந்தியாவில் 198 வைரஸ் வகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 198 முறை இவ்வைரஸ்கள் இந்தியாவில் அல்லது நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு மியூட்டேஷன் அடைந்துள்ளது.

டெல்லியில் சுமார் 39 வகைகள் பதிவாகியுள்ளன, குஜராத்தின் அகமதாபாத் மட்டும் 60 வகைகளை பதிவு செய்துள்ளது, காந்திநகரில் 13 காணப்பட்டன. தெலுங்கானாவில் 55 வகைகளும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 15 வகைகளும் கண்டறிந்துள்ளனர். இதில் இரண்டு வகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்று கொரோனா வைரஸின் தொட்டிலானா சீனாவின் வுஹானிலிருந்து வந்தது, மற்றொன்று ஐரோப்பிய வகை. அது மட்டுமின்றி ஈரான் மற்றும் துபாயில் தோன்றிய பிற வகைகள் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இந்த 198 வகைகளில் டி614ஜி என்ற மியூட்டேஷன் இந்தியாவில் பொதுவானதாக உள்ளது. இது இந்தியாவில் பரவலான மியூட்டேஷனாக இல்லாவிடினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவலாக காணப்படுகிறது. மியூட்டேஷன்கள் வைரஸின் எளிதான அல்லது வேகமான பரவலுக்கு வழிவகுக்காது, நோய் பாதிப்பை குறைவாக்கவோ அல்லது கடுமையாக்கவோ செய்யாது. ஆனால் இது வைரஸின் நடத்தைகளைப் புரிந்துகொள்ளவும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்கவும் விஞ்ஞானிகளுக்கு உதவும்.

தலைப்புச்செய்திகள்