Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாக ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது: வேல்முருகன்

ஜுன் 04, 2020 08:56

சென்னை: பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் எப்போதுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை. கொரோனாவுக்கு முன்பே 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆனால் பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மேல் பழிபோட்டு தப்ப பார்க்கிறார், என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார். இது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பதாக, பழியை கொரோனா மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் வழியே தவிர வேறென்ன?.

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்! டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) ஆண்டுக் கூட்டத்தில், காணொலி வாயிலாக இப்படிப் பேசினார் மோடி. ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்' என்ற தலைப்பின் தொடக்கவுரையில் இவ்வாறு பேசிய அவர், கொரோனா அச்சுறுத்தலுக்கிடையிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது என்று வேறு மார்தட்டிக் கொண்டார்.

மோடியின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாக ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது. காரணம், பிரதமராக அவரது நடவடிக்கை எதுவுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை. கார்ப்பரேட்கள், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே இருந்தது, இருக்கிறது. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பெருமுதலாளிகள் பலர் வெளிநாடுகளுக்குக் கம்பிநீட்டியது மோடி ஆட்சியில்தான். 

வாராக்கடன் பல நூறு லட்சம் கோடிகளை கார்ப்பரேட்கள், பெருமுதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்ததும் மோடி அரசுதான். பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில்களை எல்லாம் அழித்து வேலையின்மையையும், விலையுயர்வையும் பெருக்கி, பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கே தள்ளினார். அதனால்தான் கொரோனாவுக்கு முன்பே கடந்த 8 காலாண்டுகளாக படிப்படியாக சரிந்து 3.2 விழுக்காடாக ஆனது பொருளாதாரம். இதைப் பொருளாதார நிபுணர்களும் பன்னாட்டு நிதியமும் (IMF) கூட உறுதி செய்தனர்.

கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார். இதை ஏற்க யாரும் தயாராக இல்லை. பிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை. இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்