Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூன் 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்; அதிக இடங்களை வெல்ல பா.ஜ.க. தீவிரம்

ஜுன் 04, 2020 09:03

புதுடெல்லி: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணி ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெற திட்டம் தீட்டி வருகிறது.

அடுத்த ஆண்டிற்குள் பா.ஜ.க. ராஜ்யசபாவில் முழு பலம் பெறும் என தெரிகிறது. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் காலியாக உள்ள 55 எம்.பி.. பதவி இடங்களில் 37 இடங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. போட்டியின்றி இந்த எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மீதமுள்ள 18 இடங்கள் மற்றும் புதிதாக காலியான 6 இடங்கள் உள்பட மொத்தம் 24 இடங்களுக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. அதிக இடங்களில் எளிதாக வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த 24ல், ஆந்திரா, குஜராத், கர்நாடகாவில் தலா 4 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 3 இடங்களுக்கும், ஜார்கண்டில் 2, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சலில் தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக காலியான 6 இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 9ம் தேதி கடைசி நாள் என்றும், திரும்ப பெற 12ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜ்யசபாவில் தற்போது பா.ஜ.க.வுக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, பா.ஜ.க.வின் தோழமை கட்சிகளான அ.தி.மு.க. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டி.ஆர்.எஸ். உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், 115 ஆக உள்ளது. இதில் அ.தி.மு.க. (9இடங்கள்) தவிர மற்ற கட்சிகள் பெரிய மசோதக்களை நிறைவேற்ற பா.ஜ.க.வுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. இதனால் முழு பலம் பெற வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. உள்ளது.

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 39, தி.மு.க..வுக்கு 5, தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவுக்கு தலா 3 என மொத்தம் 69 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, 3 சுயேச்சைகள், ஒரு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர், ம.தி.மு.க. பா.ம.க. தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு உறுப்பினர்கள் உள்ளனர்.

வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் 24 இடங்களில், மத்திய பிரதேசத்தில் 3 இடங்களில் 2, ராஜஸ்தான், ஜார்கண்டில் தலா 1, கர்நாடகாவில் 2, அருணாச்சல், மிசோரமில் தலா ஒரு இடத்தை பா.ஜ.க. வெற்றி பெறும். ஆந்திராவில் 5 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 4 இடங்களை
வெல்லும். மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட சிலருக்கு பா.ஜ.க. சீட் வழங்கி உள்ளது. இவருக்கு போட்டியாக காங்கிரஸ் தரப்பில் திக் விஜய் சிங், பூல் சிங் பரையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு 3 இடங்களுக்கு 4 பேர் களம் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்