Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகப்போரின் போது கூட இப்படிப்பட்ட ஊரடங்கு இல்லை: மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்

ஜுன் 04, 2020 09:28

புதுடெல்லி: கோவிட் 19 நெருக்கடி தொடர்பாக ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்களுடன் தன் சமூகவலைத்தள பக்கத்தில் உரையாடி வருகிறார், அந்த வரிசையில் தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் உடன் இன்று உரையாடினார்.

அதில் ராகுல் காந்தி பேசும்போது, “என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. உலகமே இப்படி லாக்டவுன் செய்யப்படும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். உலகப்போரின் போது கூட இத்தகைய லாக் டவுன் இல்லை என்றே கருதுகிறேன். அப்போது கூட திறந்துதான் இருந்திருக்க வேண்டும். இது தனித்துவமான பேரழிவுதரும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பாகவே பொருளாதாரம் மந்தமடையத் தொடங்கியது, வேலைவாய்ப்பின்மை கோவிட் 19-க்கு முன்னரே தொடங்கியது ஆனால் கரோனா இவைகளை தற்போது அதன் எல்லை வரை இட்டுச் சென்றுள்ளது” என்றார்.
இதற்கு உரையாடலில் இருந்த ராஜிவ் பஜாஜ் பேசும்போது, “இந்தியா இந்த லாக் டவுனைக் கையாண்ட விதம் அடக்கு முறை ரீதியிலானது. வேறு எங்கும் இத்தகைய லாக்டவுனை நான் கண்டதில்லை, கேள்விப்படவில்லை. உலகம் முழுதும் உள்ள என் நண்பர்கல், உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடிந்தது” என்றார்.

உடனே ராகுல் காந்தி, “இது திடீரென அமல்படுத்தப்பட்டது. பணக்கார மக்கள் இதனை சுலபமாக எதிர்கொள்வார்கள், ஆனால் ஏழைகள், புலம்பெயர்வோர் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு பேரழிவுதான் இந்த லாக்டவுன்.
நிறைய பேர் நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூறுகின்றனர், இது வருத்தமளிக்கக் கூடியது, மேலும் நாட்டுக்கே அபாயகரமானது” என்றார்.

உடனே ராஜிவ் பஜாஜ், “ஆசிய நாடாக இருந்தும் நாம் கீழைத்தேய நாடுகளைப் பார்க்காமல் பிரான்ஸ், ஸ்பெயின், யுகே., யுஎஸ் போன்ற நாடுகளைப் பார்த்தா இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது? இவை சரியான அளவுகோலல்ல. உடல் நோய் எதிர்ப்பாற்றல், பருவநிலை, மக்கள் தொகை அனைத்திலும் நம் நாடு அவர்களுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டது” என்றார்

உடனே ராகுல் காந்தி, மேற்கு நாடுகளைப் பார்த்துச் செயல்படுவதை விட நாம் ஏன் நம்பிக்கையான நாடு என்று சொல்லக்கூடாது. நாம் ஏன் ஒரு இந்திய தீர்வை கண்டுப்பிடித்துக் கொள்ளக் கூடாது. அதுஏன் நம் இயல்பான உந்துதலாக இல்லை? என்றார்.

நான் பலருடன் இது தொடர்பாக பேசி வருகிறேன், அவர்கள் கூறிய ஒரு விஷயம் என் மனதில் நிலைத்து நின்றது. முழு லாக்டவுன் அறிவித்து நோயின் இயல்பை மாற்றிவிடுகிறோம். அதாவது ஆபத்தற்ற ஒரு நோயை மக்கள் மனங்களில் ஆபத்தான நோயாக உருவாக்கி விடுகிறோம். இப்படி நடந்து விட்டால் அதனை மாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. நிறைய காலமும் முயற்சியும் தேவைப்படும். லாக் டவுன் என்பதை ஏதோ ஆன் -ஆஃப் சுவிட்ச் போன்று பயன்படுத்த முடியாது என்று அவர்களில் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் நிற்கிறது.

லாக்டவுனுக்குள் சென்ற பிறகு அதனை சுவிட்ச் ஆஃப் செய்வது என்பது கடினம். அது சிக்கல் நிரம்பியது. நாம் மேற்கு நாடுகளைப் பார்க்கிறோம் நமக்குரிய முறைகளை பார்க்கவில்லை என்ற உங்களது கருத்தை ஏற்கிறேன் என்றார் ராகுல் காந்தி.

தலைப்புச்செய்திகள்