Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஜுன் 05, 2020 07:41

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன் 12 வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 29-ல் தனது சுற்றறிக்கையில், அனைத்து நிறுவனங்களும் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தங்கள் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் என்றது. மேலும், சவாலான சூழ்நிலைக்கு மத்தியில் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கவோ அல்லது அவர்களின் சம்பளத்தை குறைக்கவோ வேண்டாம் என்று முதலாளிகளுக்கு அறிவுறுத்துமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிராக சிறு தொழில் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஊரடங்கின் போது தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் மே 15 அன்று அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இம்மனுவை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதிபதிகள் விசாரித்தனர்.

தொழில் தகராறுகள் சட்டத்தின் சில விதிகள் செயல்படுத்தப்படாத போது, ஊழியர்களுக்கு 100 சதவீத சம்பளம் வழங்காததற்காக முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தொழிலாளர்கள் சம்பளமின்றி இருக்கக்கூடாது என்ற கவலை உள்ளது, அதே சமயம் தொழில்துறையினருக்கு பணம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கலாம், எனவே சமநிலை தேவைப்படுகிறது என்றனர்.

ஊரடங்கின் 54 நாட்கள் சம்பளத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் சில பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும். உள்துறை அமைச்சக அறிவிப்பின் செல்லுபடி குறித்து 3 நாட்களில் பதிலளிக்குமாறும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்