Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தந்தை எம்.எல்.ஏ.வுக்கு காரோட்டியாக மாறிய மகள்

ஜுன் 05, 2020 09:08

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு அவரது மகளே காரோட்டியாக மாறி அரசியல் பணிகளுக்கு உதவி செய்து வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவியான சஞ்சனாவுக்கு இளம் வயது முதலே அரசியல் ஆர்வம் இருப்பதால் தந்தை விஜயகுமாருடன் கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொள்கிறார். பெண் என்ற வரையறைக்குள் நிறுத்தாமல் மகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி அவருக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கிறார் விஜயகுமார் எம்.எல்.ஏ. தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த விஜயகுமார்.

தொகுதி மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றவர், வம்பு வழக்குகளில் சிக்காதவர் என தனக்கென ஒரு நன்மதிப்பை பெற்றிருக்கிறார் இவர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது பகுதியில் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அரசியல் பணிகளுக்காகவும் வெளியே செல்லவும் விஜயகுமார் எம்.எல்.ஏ.வை காரில் அழைத்துச் செல்வது வேறு யாருமில்லை, அவரது இளைய மகள் சஞ்சனா விஜயகுமார் தான். 

சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர் அரசியல் பிரவேசம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். இதனால் அவரது தந்தையுடன் கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்வதில் எப்போதும் ஆர்வம் காட்டுவார்.

இது குறித்து சஞ்சனா விஜயகுமார் கூறுகையில்; எனக்கு அரசியல் மீது தீவிர ஈடுபாடு உள்ளது. எதிர்க்காலத்தில் மக்கள் பணியாற்றுவதற்காக பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் அப்பாவுடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன். மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எங்கள் ஓட்டுநர் பணிக்கு வர முடியாததால் நானே காரை ஓட்டிச் செல்கிறேன், எனக் கூறினார்.

சஞ்சனா விஜயகுமார் தனது தந்தையை அமரவைத்து கார் ஓட்டி வருவதை, கும்மிடிப்பூண்டி மஞ்சாங்கரணை பகுதி மக்கள் வியந்து பார்க்கின்றனர். மேலும், எஸ்.யூ.வி. மாடலான ford endeavour காரை சஞ்சனா விஜயகுமார் துணிச்சலாக இயக்குவது அப்பகுதி மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்