Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகை தர வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

ஜுன் 05, 2020 09:13

சென்னை: பொதுமக்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்காவது சலுகைகள் தர வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முந்தைய மாதக் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியான போதே அடுத்து வருகின்ற மாதக் கணக்கெடுப்பில் இந்த பி.எம்.சி கட்டணம் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், இப்போது மின் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட முறையில் உத்தரவாதம் தரப்பட்டபடி மின்கட்டணம் வசூல் செய்யாமல்- குறிப்பாக யூனிட்டை கழிக்காமல்  வெவ்வேறான வீதப்பட்டியல் அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

நடிகர் பிரசன்னா இதுகுறித்துக் கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக நியாயமான பதிலளிப்பதற்குப் பதில், பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரசியல் ரீதியான அறிக்கையை ஒரு விளக்கமாகக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில், ஆளுவோரைத் திருப்திப்படுத்துவதற்காக, அதிகாரிகளும் எந்த அளவிற்கு அரசியல்மயமாகி விட்டார்கள் என்ற அவலத்தை எடுத்துரைக்கிறது.

நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்காமல், கட்டணம் வசூலிப்பதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்பது நன்கு தெரிந்திருந்தும் தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்பது போல், மின் பகிர்மானக் கழகம் விந்தையான விளக்கமளிப்பதும், அதை அ.தி.மு.க. அரசு ஆமோதித்து கொரோனா காலத்தில் மக்களிடம் சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும்.

மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதில், ஊரடங்கில் வருமானத்தை இழந்து, வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிக்கும் அவர்களுக்கு வீட்டுக்குப் பயன்படுத்தும் மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து, அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அ.தி.மு.க. அரசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்