Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 வாரமாக எதுவும் சாப்பிட முடியாமல் தவித்த யானை: பிரேத பரிசோதனையில் தகவல்

ஜுன் 06, 2020 07:26

கொச்சி: 'வெடிகளால் நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தை தின்றதால், வாயில் காயங்கள் ஏற்பட்டு, இரண்டு வாரமாக எதுவும் சாப்பிட முடியாமல் தவித்து, யானை இறந்துள்ளது' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலக்காடு மாவட்டம், அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை, ஒரு கிராமத்துக்குள் உணவு தேடி சென்று உள்ளது.அங்கு இருந்தவர்கள், வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை அதற்கு கொடுத்து உள்ளனர். கர்ப்பமாக இருந்த அந்த யானை, அதைச் சாப்பிட்டபோது, வெடி வெடித்து அதன் நாக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகள் சிதறின. வேதனை தாங்க முடியாமல், தண்ணீருக்குள் இறங்கி நின்று, அந்த யானை தவித்தது.வனத்துறை அதிகாரிகள், கும்கி யானையின் உதவியோடு, அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானைபரிதாபமாக இறந்தது.இந்த சம்பவம், நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கேரள அரசிடம், மத்திய அரசு கேட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வெடிகள் வெடித்ததில், யானையின் வாயில் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எரிச்சல் தாங்காமல், தண்ணீரை யானை வாயில் ஊற்றிக் கொண்டுள்ளது. இதில், அந்த காயங்கள் சீழ் பிடித்துள்ளன. வாயில் ஏற்பட்ட வலியால் துடித்த யானை, இரண்டு வாரமாக எதுவும் சாப்பிட முடியாமல், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்துள்ளது.பசி மயக்கம் மற்றும் காயங்களால் ஏற்பட்ட வலியால், யானை மயங்கி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது. வெடிப்பொருட்கள் இருந்த பழத்தை தின்றதால் தான், யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாக தெரிகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யானையைக் கொன்ற வழக்கில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, வனத்துறையினர் கைது செய்து உள்ளனர். இது குறித்து, கேரள வனத்துறை அமைச்சர் ராஜு கூறுகையில், ''அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து, யானையைக் கொலை செய்த விவகாரத்தில், ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பெயர் வில்சன்; தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்த வழக்கில், மேலும் பலர் கைது செய்யப்படுவர்,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்